விநாயகர்விரதமும் அதன் மகிமையும்.
(2018.11.23) இன்று விநாயகர் விரதம் ஆரம்பம்.
காரியத்தடை நீக்கும் விநாயகர்சஷ்டி விரதம்
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் ‘விநாயகர் சஷ்டி விரதம்’ ஆகும். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதத்தில் ஒன்று இது.
இந்த விரதத்தை மிகுந்த பயபக்தியோடு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒருமுறை விக்கிரமாதித்தனின் மனைவியான இலக்கண சுந்தரி, இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாள். ஆணவம் மிகுதியால், இடையில் நோன்பை கைவிட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி எறிந்தாள். அதன் விளைவாக, அவளது கணவன் விக்கிரமாதித்தனால் துரத்தப்பட்டு, காட்டிலேயே சில காலம் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் காட்டில் இருந்தபடியே விநாயகர் சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து, பிரிந்த தனது கணவருடன் சேர்ந்தாள் என்பது புராணக் கதை.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், 21 இழையிலான நூல் காப்பை விரதத்தின் தொடக்க நாளில் கட்ட வேண்டும். இந்த நூலை ஆண்கள் தனது வலது கையிலும், பெண்கள் தங்களது இடது கையிலும் கட்ட வேண்டியது முக்கியம். மேலும் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்டு, அவரவர் வசதிக்கேற்ப விநாயகருக்கு விருப்பமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.
இளநீர், கடலை, அவல், பொரி, எள்ளுருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மேலும் அறுகம்புல், எருக்கம்பூ, பன்னீர்பத்திரம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்தும் இறைவனை வழிபடலாம். விநாயகர் சஷ்டி விரத நாட்களில், வீட்டில் இருந்தபடியோ அல்லது தினமும் ஆலயங்களுக்கு சென்றோ, விநாயகரின் கதையை வாசித்தும், அவரது துதிப் பாடல்களைப் பாடியும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி நாளான சஷ்டி அன்று முழு உபவாசம் இருந்து, மறுநாள் காலையில் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றைக் கழற்றிய பின்னர், விநாயகரை பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
விநாயகருக்குப் பிரியமான மோதகத்தின் வெளித்தோற்றம் மாவு போன்று இருக்கும். ஆனால் உள் பாகத்தில் வெல்லமும், தேங்காயும் கலந்த சுவைமிக்க ‘பூரணம்’ என்ற பொருள் இருக்கும். மேலே உள்ள மாவுப் பொருள் தான் அண்டம். உள்ளே இருக்கும் சுவையான பொருள், பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும். சுவை மிகுந்த இறைவனின் நற்குணங்களை மா என்னும் மாயை மறைத்து நிற்கிறது. அந்த மாயையை உடைத்தெறிந்தால், பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள்.
விநாயகர் சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பதால் வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். மேலும் கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றியாகும்.
பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா?
ஒரு செயலை தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டே ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆன்மீக விதி.
பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா?
நிறைய பேருக்கு பிள்ளையார் சுழி எதற்காக போடுகிறோம் என்று தெரியாது.
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம்.
அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம்.
பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ’ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! 72