Stan Lee :மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்
Stan lee: மார்வல் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் கிரியேட்டரான ஸ்டேன் லீ, உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்வல் காமிக்ஸில் வரும் பல முக்கிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் கிரியேட்டரான ஸ்டேன் லீ, உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் தற்போது பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் படங்கள் என்றால், அது சூப்பர் ஹீரோ படங்கள்தான். அவற்றிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் மார்வல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனைப் படைத்து வருகின்றன. அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மேன் என இவற்றின் சூப்பர் ஹீரோ வெற்றிப் படங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்நிலையில், இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ, 95 வயதில் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். நிமோனியாவில் பாதிக்கபட்டிருந்த அவருக்கு பார்வைக் குறைபாடும் இருந்துள்ளது. இந்த நிலைமையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1961 ஆம் ஆண்டு ஜேக் கிர்பி என்பவருடன் இணைந்து, முதல் முறையாக பேன்டாஸ்டிக் போர் காமிக்ஸை வடிவமைத்த இவர், தொடர்ந்து ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர், ஹல்க் உள்ளிட்ட பிரபல காமிக்ஸ்களை உருவாக்கினார். இந்தக் காமிக்ஸ்கள் படங்களாக எடுக்கப்பட்ட போது, அந்தப் படங்கள் எல்லாவற்றிலும் சிறப்புத் தோற்றத்தில் ஒரு சில நொடிகள் தோன்றி வந்தார்.
ஸ்டேன் லீயின் திடீர் மரணத்தால், ஹாலிவுட் மற்றும் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.