ஏழைச் சிறார்களின் வாழ்வில் கல்விச் சுடரை ஏற்றி வைத்த நடராஜானந்த சுவாமிகள்
52வது நினைவு தினம் இன்று
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகளாரை ஈன்றெடுத்த கிழக்கின் காரைதீவு மண் மற்றுமொரு சேவைத் துறவியையும் தமிழுலகுக்கு அளித்தது.
அவர்தான் சுவாமி நடராஜானந்த மஹராஜ். சேவைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சுவாமியின் 52வது சிரார்த்த தினம் இன்று (18.03.2019) ஆகும். உத்தமத் துறவியான அவர் சேவையின் சிகரமாக வாழ்ந்தார்.’ஏழைச்சிறுவர்களின் வாழ்வில் கல்வி எனும் சுடரை ஏற்றி மறுமலர்ச்சியை
தோற்றுவித்த சேவாதிலகம்’ அவர்.
கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக 1903ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதி அவர் அவதரித்தார். அவரது பெயர் சிதம்பரப்பிள்ளை.இவரை செல்லமாக ‘சீனிவாசகம்’ எனவும் அழைத்தனர்.
சீனிவாசகம் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு ஆண்கள் பாடசாலையிலும் அடுத்து கல்முனை புனித மரியாள் ஆங்கிலக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் பெற்று சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார். சுவாமிகள் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சை, லண்டன் மெற்றிக்குலேசன் ஆங்கில ஆசிரியர் தராதரப் பத்திரம் போன்ற பரீட்சைகளில் தேறி சிறந்த ஓர் ஆசானாக தன்னை உயர்த்திக் கொண்டார்.திருகோணமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியத் தொழிலை சீராகச் செய்து தனது உன்னத பணியின் பேறாக சிறந்த கல்வியறிவுள்ள மாணவச் செல்வங்களை உருவாக்கினார்.
இவர் ஆசிரியர் தொழிலை விட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியல் உதவியாளராக பணியாற்றினார்.இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளும் தொண்டுகளும் கடமைகளும் சுவாமிகளை மிகவும் கவர்ந்தன. அதன் காரணமாக தனது பதவியைத் துறந்தார்.
அவ்வேளையில் சுவாமி விபுலானந்தரின் அருட்பார்வையால் கவரப்பட்டு இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து ‘நிர்வேத சைதன்யர்’ எனும் பிரமச்சரிய நாமம் பெற்று துறவுநிலை பூண்டார்.
ரங்கூனில் இராமகிருஷ்ண சங்கத்தால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவமனையில் வைத்தியர்களுக்கு உதவியாக நோயாளிகளுக்கு வேண்டிய சிறந்த சேவையாற்றினார்.2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு காரணமாக ரங்கூன் பிரதேசம் முற்றாக பாதிக்கப்பட்டு மக்கள் அகதிகளாயினர். சுவாமிகளும் அகதியாக கல்கத்தாவை வந்தடைந்து பின் தாய்நாடு திரும்பினார்.
1943ம் ஆண்டு கல்கத்தா நகரிலுள்ள இராமகிருஷ்ண சங்கத் தலைமையகத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடரான சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக் கொண்டு சந்நியாச தீட்சை பெற்று ‘சுவாமி நடராஜானந்தர்’ எனும் தீட்சா நாமம் பெற்றார்.
பின்னர் மட்டக்களப்பு,கல்லடியில் அமைந்துள்ள சிவபுரியில் தங்கியிருந்து 26 இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளினதும், 3 சிறுவர் இல்லங்களினதும் முகாமையாளராக பணியாற்றினார். அறுவடை காலங்களில் சாக்கைத் தோளில் போட்டுக் கொண்டு வயல்களுக்குச் சென்று அங்கு போடிமார் கொடுக்கும் நெல்லையும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு பெற்றோரை இழந்த விடுதிக் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினார். அதுமட்டுமன்றி தாயாய் அன்புகாட்டி, அரவணைத்து, தந்தையாய் கல்வியறிவூட்டி, இல்லச் சிறுவர்கள் நோயுற்ற வேளை இரவு பகல் பாராது விழித்திருந்து சேவையாற்றும் சேவகனாகவும் உன்னத பணிகள் செய்தார்.
சுவாமிகளின் மேற்பார்வையில் இருந்த சிவானந்தா இல்லம்,காரைதீவு மகளிர் இல்லம், ஆனைப்பந்தி மகளிர் இல்லம் ஆகிய இல்லங்களிலுள்ள குழந்தைகளின் தேவைகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
உண்மைத் துறவியாக, சேவையின் சிகரமாக, ஏழைக் குழந்தைகளின் அன்பு அன்னையாக, நல்லாசானாக பிரகாசித்த அன்புத் தெய்வம் 1967ம் ஆண்டு பங்குனி மாதம் 18ம் திகழி சனிக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் படத்தை தனது மார்பிலே அணைத்த வண்ணம் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
வி.ரி.சகாதேவராஜா
சுவாமி நடராஜானந்தா
நூற்றாண்டு விழாக் குழுச்
செயலாளர்)